திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டமற்ற தொகுதிகள் உள்ளன. வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் (VVPAT) இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கும் முறையான ‘இரண்டாம் கட்ட குலுக்கல்‘ (Second Randomization) நிகழ்வு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
உள்ளடக்கம்
திருவாரூர் தேர்தல்
இந்த நிகழ்ச்சியானது, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.வ.மோகனச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு (EVM Management System) மென்பொருள் மூலம் இயந்திரங்கள் தோராயமாகப் பிரிக்கப்பட்டன.
இந்த ‘இரண்டாம் கட்ட குலுக்கல்’ நிகழ்வில், 166.திருத்துறைப்பூண்டி (தனி) மற்றும் 167.மன்னார்குடி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திருமதி.டி.வி.அனுபாமா, இ.ஆ.ப., மற்றும் 168.திருவாரூர் மற்றும் 169.நன்னிலம் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திரு.அஜய்யாதவ், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் செல்வி. பல்லவி வர்மா, இ.ஆ.ப., மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
Read also: தமிழ்நாடு தேர்தல் திமுக vs அதிமுக கூட்டணியில் இஸ்லாமிய வேட்பாளர்கள்
இரண்டாம் கட்ட குலுக்கல் (Second Randomization) என்றால் என்ன?
பொதுவாகத் தேர்தல் நேரங்களில் ‘இரண்டாம் கட்ட குலுக்கல்’ என்ற வார்த்தையை நாம் தினசரி நாளிதழ்கள் அல்லது தொலைக்காட்சியில் வரும் செய்திகளில் பார்த்திருப்போம். ‘இரண்டாம் கட்ட குலுக்கல்’ என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான நடைமுறையாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த வகையிலும் முறைகேடும் நடக்காமல் இருக்க, அவற்றை கணினி மூலம் தோராயமாக (Random-ஆக) பிரித்து எந்த இடத்திற்கு அனுப்புவது என முடிவு செய்யும் முறைதான் இந்த ‘இரண்டாம் கட்ட குலுக்கல்’.
இரண்டு கட்டச் செயல்பாடுகள்
இதன் இரண்டு கட்டச் செயல்பாடுகள் பின்வருமாறு:
முதல் கட்ட குலுக்கல் (First Randomization): இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். ஒரு மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குப்பதிவு இயந்திரங்களும் எந்தெந்த சட்டமன்றத் தொகுதிக்குச் (Assembly Constituency) செல்ல வேண்டும் என்பதை இதில் கணினி மூலம் பிரிக்கப்படும். (உதாரணமாக, எந்தெந்த மெஷின்கள் திருவாரூர் தொகுதிக்கு, எவை மன்னார்குடிக்கு, எவை நன்னிலத்துக்கு எனப் பிரிப்பது).
இரண்டாம் கட்ட குலுக்கல் (Second Randomization): ஒரு குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிக்கு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு, அதன் அடுத்த நிலையான இந்த இரண்டாம் கட்டம் நடைபெறும். அந்தத் தொகுதிக்கு வந்த இயந்திரங்களை, அந்தத் தொகுதியில் இருக்கும் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு (Polling Booth) அனுப்புவது என்பதை இதில் முடிவு செய்வார்கள்.
Read also: ஸ்டாலின் – மோடி இடையே டீல்? திமுக – பாஜக கூட்டணி குறித்து மம்தா பானர்ஜி
ஏன் இவ்வளவு முக்கியமானதாக இந்த நடைமுறை கருதப்படுகிறது?
எந்த சீரியல் நம்பர் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரம், எந்த ஊரில் உள்ள எந்த பூத்துக்குப் போகிறது என்பது அதிகாரிகளுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ முன்கூட்டியே அறிந்துகொள்ள துளியும் இடமளிக்காமல் இருப்பதே அதற்கு காரணம். அனைத்தும் EVM Management System கணினி மூலமே முடிவாகும். எனவே, தேர்தலில் யாரும் முன்கூட்டியே குறிப்பிட்ட இயந்திரங்களை வைத்து எந்தவித முறைகேடுகளிலும் (Rigging) ஈடுபட்டு விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
வெளிப்படைத்தன்மை
குலுக்கல் நடைபெறும் பொழுது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே, மாவட்ட ஆட்சியர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைவரின் முன்னிலையில் இந்த இரண்டாம் கட்ட குலுக்கல் வெளிப்படையாக நடைபெறுகிறது.
FAQs
1) EVM ‘இரண்டாம் கட்ட குலுக்கல்’ (Second Randomization) என்றால் என்ன?
ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தத் தொகுதியில் உள்ள குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்கு (Polling Booths) கணினி மூலம் தோராயமாக ஒதுக்கும் முறையாகும்.
2) முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட குலுக்கலுக்கு உள்ள வித்தியாசம் என்ன?
முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சட்டமன்றத் தொகுதிகளுக்கும்’, இரண்டாம் கட்டத்தில் அந்தத் தொகுதியில் உள்ள ‘வாக்குச்சாவடிகளுக்கும்’ (Booths) பிரித்து அனுப்பப்படும்.
3) தேர்தலில் EVM இயந்திரங்களை குலுக்கல் முறையில் பிரிக்க முக்கிய காரணம் என்ன?
எந்த இயந்திரம் எந்த பூத்திற்குச் செல்லும் என்பதை ரகசியமாக வைத்து, தேர்தல் முறைகேடுகளைத் (Rigging) தடுத்து நூறு சதவீத வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகும்.
முக்கியக் குறிப்புகள்!
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், EVM இயந்திரங்களுக்கான ‘இரண்டாம் கட்ட குலுக்கல்’ வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம், ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மென்பொருள் உதவியுடன் தோராயமாகப் பிரிக்கப்பட்டு, எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் என்பது ரகசியமாக முடிவு செய்யப்படுகிறது. தேர்தல் முறைகேடுகளை முழுமையாகத் தவிர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த நடைமுறை வெளிப்படையாக நடைபெறுகிறது. இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு, நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் தேர்தல் ஆணையத்தின் மிக முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox









